ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு? முதலமைச்சர் கலைஞர் சிறப்பு பேட்டி!

cm mk

தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டு அதற்கேற்ப சட்டம் உருவாக்கப்படுவதுதான் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்று முதல் அமைச்சர் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் கலைஞர் அவர்கள், 18-.2.–2010 தேதி-யிட்ட குமுதம் இதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார்.

முதல்வர் கலைஞரின் பேட்டித் தொடர்ச்சியை 3.-3.-2010 தேதிய குமுதம் இதழ் வெளியிட்டுள்ளது. அப்பேட்டியில்,

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் சேர்ந்து நடப்பதால்  அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளோடு புதுமைகளை விளைவிக்கும் தகுதியும், பெருமையும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் கிடைக்கும் என முதல்வர் கலைஞர் அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் கலைஞர் அவர்கள் அளித்துள்ள பேட்டி வருமாறு:

கேள்வி: தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன?

கலைஞர்: உலகத்தின் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்களும்  தமிழ் ஆராய்ச்சியாளர்களும்  தமிழ் ஆர்வலர்களும் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரே இடத்தில் சங்கமித்து தங்களுடைய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தமிழ் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களை வகுக்கவும், நடக்கப் போகும் ஆய்வரங்குகளின் மூலம் தமிழ் மொழியின் பன்முக ஆற்றலை உலகுக்கு உணர்த்தவும் என்று இப்படி பல நன்மைகள் இந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலமாக ஏற்படும். அது மாத்திரமல்ல; தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் இணைந்து நடப்பதால் எதிர்கால அறிவியல்  தொழில் நுட்ப வளர்ச்சிகளோடு போட்டி போட்டுக் கொண்டு புதுமைகளை விளைவிக்கும் தகுதியும் பெருமையும் தமிழுக்கும்  தமிழர்களுக்கும் கிடைக்கும்.

கேள்வி: தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு உங்கள் அரசியல் எவ்வாறு இருக்கும்.

கலைஞர்: எப்போதும் போல் செம்மையாகவே இருக்கும்.

கேள்வி: மத்திய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து எம்.கே.நாராயணன் மாற்றப்பட்டிருக்கிறார். அதனால் இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் நிலை மாறுமா?

கலைஞர்: அதிகாரிகள் மாற்றப்படலாம். அதனால் ஒரு அரசு மேற்கொண்டுள்ள கொள்கைகளிலோ, நடவடிக்கைகளிலோ மாற்றம் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை.

கேள்வி: விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதால் இலங்கையின் கை இப்போது ஓங்கியிருக்கிறது. இந்தியாவின் பிடி நழுவிவிட்டது என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

கலைஞர்: விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் காரணமாக எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களுக்கு இன்னல் விளையுமேயானால் அதை திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்க்காது என்பது உறுதி.

கேள்வி: இலங்கைக்கு இந்திய பாராளுமன்றக் குழுவினர் சென்று வந்தனர். இதன் பிறகு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

கலைஞர்: இந்தியப் பாராளுமன்றக் குழுவினர் சென்ற காரணத்தினால்தான் அதுவரை ஏறத்தாழ மூன்று இலட்சம் இலங்கைத் தமிழர்கள் முகாம்கள் என்கிற பெயரில் முள்வேலிக் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்த நிலை மாறி, லட்சத்திற்கு மேற்பட்டோர் அவர்களுடைய சொந்த வாழ்விடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது.

கேள்வி: இலங்கைப் பிரச்சினைக்கு நீங்கள் சொல்லும் தீர்வு என்ன?

கலைஞர்: தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டு அதற்கேற்ப அரசியல் சட்டம் உருவாக்கப்படுவதுதான் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும்.

கேள்வி: இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகாவுக்கு, இந்தியா அடைக்கலம் கொடுக்க முன்வந்தால் நீங்கள் ஆதரிப்பீர்களா?

கலைஞர்: இதே போன்ற ஒரு கேள்விக்கு நான் ஏற்கெனவே பதில் சொல்லியிருக்கிறேன். இலங்கை வரலாற்றில் அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் யாரெல்லாம் பழி வாங்கப்பட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். அதே நேரத்தில் இந்திய வரலாற்றில் அலெக்சாண்டரிடம் தோல்வியுற்ற புருஷோத்தம மன்னனை, அலெக்சாண்டர் எப்படி நடத்தினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்தச் சரித்திரக் குறிப்பை இலங்கையிலே உள்ள ஆட்சியாளர்கள் மறந்திருக்க நியாயமில்லை.

கேள்வி: சமச்சீர் கல்வி இந்த ஆண்டே நிறைவேற்றப்படுமா?

கலைஞர்: முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வி நிறைவேற்றப்படும் என்று ஏற்கெனவே சொல்லப்பட்டது போலவே நிறைவேற்றப்படும். தொடர்ந்து படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் அது விரிவுபடுத்தப்படும்.

கேள்வி: கிராமப்புற பள்ளிக் குழந்தைகள் பலர் இன்றும் காலில் செருப்பில்லாமல்தான் பள்ளிக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு இலவச செருப்பு வழங்கும் திட்டம் அரசிடம் இருக்கிறதா?

கலைஞர்: இலவசங்கள், பொருளாதாரச் சீர்கேடு என்கிறார்களே சிலர்!

கேள்வி: உலகத் தமிழ் மாநாடு போல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் அடிக்கடி நடத்தப்படுமா?

கலைஞர்: இனிமேல் இப்போது ஏற்பட்டது போன்ற அதிக இடைவெளி இல்லாமல் நடத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

5 responses | பிப்ரவரி 27th, 2010 at 1:54 pm under  BreakingNews, அரசியல், பேட்டி
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

5 Responses to “ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு? முதலமைச்சர் கலைஞர் சிறப்பு பேட்டி!”

  1. ஈழதமிழன்
    4:16 pm on பிப்ரவரி 27th, 2010

    கலைஞரின் கருத்து ஏற்புடையது

    ஈழதமிழன்

  2. வேங்கடம் திருச்சி
    8:46 pm on பிப்ரவரி 27th, 2010

    கலைஞர் பேட்டி சரியாதே உங்கள் கோரிக்கையை மத்திய அரசின் கவனதிற்கு கொண்டுப்போங்கள்
    வேங்கடம் திருச்சி

  3. ஈழ மகன்
    11:13 pm on பிப்ரவரி 28th, 2010

    கலைஞர் எப்போதும் தமிழர் பக்கம்தான் கலைஞருக்கு தமிழர் எப்போதும் உடு துணையாக இருப்பார்கள்=
    ஈழ மகன்

  4. Ezha Thamizichi
    7:03 pm on மார்ச் 16th, 2010

    தமிழர் பக்கம் எப்பவும் இருக்கும் உங்கள் கலைஞர், முள்ளிவாய்க்காலில் அத்தனை ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது என்ன செய்தார்?

    “இலவசங்கள், பொருளாதாரச் சீர்கேடு என்கிறார்களே சிலர்!”… இப்படி சொல்லி பொறுப்பை தட்டி கழிக்கிறார் உங்கள் முத(லை)ல்வர். இதை எப்போது நீங்கள் எல்லாம் புரிந்து கொண்டு விளிக்கிறீர்களோ அன்றுதான் உங்கள் நாடு உருப்படும்

  5. சோழியான்
    6:12 am on மார்ச் 17th, 2010

    //கலைஞர்: விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் காரணமாக எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களுக்கு இன்னல் விளையுமேயானால் அதை திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்க்காது என்பது உறுதி.//

    தொலைபேசி.. மின்னஞ்சல் எதுவும் அவருக்கு தெரியாது.. பாவம்.. மத்திய அரசுக்கு தந்தி கொடுப்பார்.. அவளவுதான்.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."